01. எனது குருதிக்குளுக்கோஸ் மிகக் குறைவாக செல்லக்கூடுமா?
ஆம் நீங்கள் உங்களுடைய உணவினை அல்லது சிற்றுண்டியை சரியான வேளையில் எடுக்காதிருந்தால் உங்கள் குருதிக் குளுக்கோஸ் மிகக்குறைந்த நிலையை அடையமுடியும். இது குளுக்கோஸ் குறைந்த நிலை ( Hypoglycaemia) என அழைக்கப்படும்
நீங்கள் நீரிழிவைக்கட்டுப்படுத்த இன்சுலின் சிகிச்சை அல்லது சிலவகை மருந்துகள் பாவிப்பவராயின் குளுக்கோஸ் குறைவு நிலை ஏற்படும் வாய்ப்பு உண்டு.
நீங்கள் நீரிழிவுக்காக உணவுக்கட்டுப்பாட்டுச் சிகிச்சையை மாத்திரம் மேற்கொள்பவராக இருந்தால் குளுக்கோஸ் குறைவு நிலை ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவாகும்.
02. எனது குருதிக்குளுக்கோஸ் அளவு மிகக் குறைவாக உள்ளதை அறிவது எப்படி?
நீங்கள் அதிகபசி, மயக்கம், நடுக்கம், அதிக வியர்வை, சிலவேளைகளில் எரிச்சல் தன்மை அல்லது ஆத்திரப்படுதல் போன்றவற்றை உணரக்கூடும்.
03. குளுக்கோஸ் குறைவு நிலை ஏற்படுவதற்கு காரணம் என்ன?
நீங்கள் குருதிக் குளுக்கோசைக் கட்டுப்படுத்த இன்சுலின் அல்லது குளிசைகளை பயன்படுத்துபவராக இருந்தால்,
i. உணவுவேளையை அல்லது சிற்றுண்டியை தவறவிடுவதன் மூலம் அல்லது வழமையான அளவு உணவை விடக்குறைவாக உட்கொள்ளுவதன் மூலம் குளுக்கோஸ் குறைவு நிலை ஏற்படலாம்.
ii. சிலவேளைகளில் மேலதிக உணவு எதனையும் உட்கொள்ளாமல் நீண்டநேரமாக வேலை செய்தல் உடற்பயிற்சி செய்தல் போன்றன குருதிக் குளுக்கோஸ் குறைவு நிலையை ஏற்படுத்தலாம்.
iii. அளவுக்கதிகமாக இன்சுலின் அல்லது குளிசைகளை உள்ளெடுத்தல்
iv. அளவுக்கதிகமான அற்ககோல் (Alcohol) பாவனை
04. குருதிக்குளுக்கோஸ் குறைவு நிலை ஏற்படின் என்ன செய்ய வேண்டும்?
i. உங்களால் குருதிக்குளுக்கோஸ் குறைவு நிலைக்குரிய அறிகுறிகள் ஏதேனும் காணப்படின் சிறிதளவு குளுக்கோஸ் அல்லது சீனி சேர்த்த ( ½ -1 தேக்கரண்டி) ஒரு கோப்பை தேநீர் அல்லது பழரசம் குடியுங்கள். நேரத்தைக் குறித்து வையுங்கள். உடனடியாக சீனி சேர்க்காத சிற்றுண்டி ஒன்றை உட்கொள்ளுங்கள்.
ii. நீங்கள் முதல் நாள் குளுக்கோஸ் குறைவுநிலை ஏற்பட வேளைக்கு சற்று முன்னர் சீனி சேர்க்காது ஒரு சிற்றுண்டியை உண்பதன் மூலம் மறுநாளும் இந்நிலை ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
iii. உங்கள் வைத்தியருக்கு குளுக்கோஸ் குறைவு நிலை ஏற்பட்ட நேரத்தைத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் உங்களுடைய இன்சுலின் அளவை அல்லது நீரிழிவு மாத்திரையை குறைக்குமாறு வேண்டப்படலாம்.
iv. குளுக்கோஸ் குறைவு நிலைக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் உங்களிடம் குளுக்கோமானி (glucometer) காணப்படின் (குளுக்கோஸ் அல்லது சீனி உள்ளெடுக்க முன்னர்) உங்கள் குருதிக் குளுக்கோஸ் அளவைப் பரிசோதித்து அதனை குறித்த திகதி மற்றும் நேரத்துடன் பதிவு செய்து வையுங்கள். இப்பதிவுகளை உங்கள் வைத்தியரிடம் காட்டி ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
v. நீங்கள் வாகனம் செலுத்திக் கொண்டிருந்தால் வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு சிற்றுண்டியை அல்லது இனிப்பை உள்ளெடுங்கள்.
05. குருதிக்குளுக்கோஸ் குறைவு நிலையினை எவ்வாறு தவிர்க்கலாம்?
i. உங்களுடைய உணவு மற்றும் சிற்றுண்டியை சரியான வேளையில் எடுங்கள்.
ii. பிரதான உணவு தாமதமானால் ஒரு சிற்றுண்டியை உள்ளெடுங்கள்.
iii. வழமையை விட அதிக வேலை செய்ய நேரிட்டால் குறித்த வேலைக்கு முன்னராக ஒரு மேலதிக சிற்றுண்டியை உட்கொள்ளுங்கள்.
iv. பிரயாணம் செய்யும்போது எப்போதும் ஒரு சிற்றுண்டியை அல்லது சில இனிப்புக்களை வைத்துக்கொள்வதுடன், குளுக்கோஸ் குறைவு நிலை அறிகுறிகள் ஏற்படின் விரைவாக அதை உள்ளெடுங்கள்.
v. இனிப்பு எடுப்பதை ஒரு பழக்கமாக ஏற்படுத்தாதீர்கள் இனிப்பை விட இனிப்பு சேர்க்காத ஒரு சிற்றுண்டியே விரும்பத்தக்கது.
06. உள்ளெடுக்ககூடிய சிற்றுண்டி வகைகள் எவை?
i. 2 கிறீம்கிறக்கர் பிஸ்கட் / தவிட்டுகிறக்கர் / குரக்கன் கிறக்கர்
ii. 1 வாழைப்பழம்
iii. 1 தோடம்பழம்
iv. 1 சான்விச் அல்லது பாண் சிற்றுண்டி
v. ஒரு கோப்பை பால்தேநீர் ( சீனி சேர்க்காதது)
vi. சீனி சேர்க்காத பழரசம்
vii. ஒரு பால் பக்கட் (இனிப்பற்றது)
viii. ஒரு கோப்பை யோக்கட்
மேற்குறிப்பிடப்பட்டவற்றில் ஏதாவது ஒன்றினை மாத்திரம் உள்ளெடுங்கள்.
07 குளுக்கோஸ் குறைவு நிலை ஏன் பாதகமாது?
நீங்கள் உணர்விழந்த நிலையை அடைய நேரிடலாம். இது உங்களை பாதிக்கலாம். (குளுக்கோஸ் குறைவு நிலைக் கோமா)
மருத்துவர். கஜேந்தினி வேலுப்பிள்ளை
நீரிழிவு சிகிச்சை நிலையம்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.