ஆஸ்துமா அல்லது தொய்வு என்பது நீண்ட காலமாக காணப்படக்கூடிய ஒரு சுவாச நோய் நிலைமையாகும். இது சமுதாயத்தில் பொதுவான ஒரு நோயாகக் காணப்படுகின்றது. உலக அளவில் ஆஸ்துமா அல்லது தொய்வு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்து வருகின்றது.
பொதுவாக இந்நோய்நிலைமை சிறு வயதிலேயே ஆரம்பிக்கிறது. ஆஸ்துமா அல்லது தொய்வு நோயாளிகளில் தொடர்ச்சியான இருமல், மூச்செடுப்பதில் சிரமம், நெஞ்சை இறுக்கிப் பிடிப்பது போன்றிருத்தல், மூச்சு விடும்போது சத்தம் ஏற்படல்(இழுப்பு) போன்ற குணங்குறிகள் காணப்படும்.
ஆஸ்துமா அல்லது தொய்வு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஆஸ்துமா நோயினைத் தூண்டக்கூடிய காரணிகளாக
குளிர்காற்று,
தொற்று நோய்கள்,
சூழல் ஒவ்வாமை,
சில வகை மருந்துகள் (வலிநிவாரணிகள்)
மனநிலை மாற்றங்கள்,
உடற்பயிற்சி,
தூசு,
சிகரெட்
மற்றும் ஏனைய புகைகள் போன்றன காணப்படுகின்றன.
இந்நோய் ஏற்படாது தடுப்பதற்குரிய முதன்மையான பாதுகாப்பு முறைகளாக
கர்ப்பமாக உள்ளபோது பெற்றோர் புகைப்பிடித்தலைத் தவிர்த்தல்,
கர்ப்பிணித் தாய்மார் விற்றமின் E, செலனியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளல்,
தாய்ப்பாலூட்டல்,
மீணெண்ணெய், விற்றமின் C, அன்ரிஒக்சிடென்ஸ் (Antioxidants) மக்னீசியம் நிறைந்த ஆரோக்கிய உணவுகளை உண்ணுதல் போன்றனவற்றை குறிப்பிடலாம்.
ஆஸ்துமா அல்லது தொய்வு நோயினை முற்றாக குணப்படுத்த இயலாது ஆயினும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் ஆஸ்துமா நோயாளியும் சுகதேகிபோல் வாழமுடியும்.
ஆஸ்துமா அல்லது தொய்வு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குச் செய்ய வேண்டியவை.
- ஆஸ்துமா அல்லது தொய்வு நோயைத் தூண்டக்கூடிய காரணிகளைக் கண்டறிந்து அவற்றை தவிர்த்தல்.
- சுவாசத் தொற்றுக்களின் போது உடனடிச் சிகிச்சை பெறுதல்
- புகைப்பிடித்தலைத் தவிர்த்தல்.
- சுற்றுப்புறத்தைச் சுத்தமாக பேணுதல்.
- போதுமான காற்றோட்டமுள்ள இடத்தில் வசித்தல்
- செல்லப் பிராணிகளுடன் மிகவும் நெருக்கமாகப் பழகுவதை தவிர்த்தல்.
- தினமும் உடற்பயிற்சி செய்தல்.
- உடல் நிறையை நியம அளவில் பேணுதல்
- மருந்துகளை வைத்தியரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப உள்ளெடுத்தல்
- உங்களுக்குரிய மருந்துகளை உரிய முறையில் கிரமமாக உள்ளெடுத்தல்
ஆஸ்துமா அல்லது தொய்வு நோயாளிகளுக்கான சில அறிவுரைகள்
- உங்களுக்கு தரப்பட்டுள்ள மருந்து உள்ளெடுக்கும் உபகரணத்தை (inhaler) கையாளும் முறையை அறிந்து அதற்கேற்ப செயற்படுங்கள்.
- தரப்படும் மருந்துகளை ஒழுங்காக உள்ளெடுங்கள்.
- ஆஸ்துமா நாட்குறிப்பேட்டை பயன்படுத்துங்கள்.
பகல், இரவு வேளைகளில் உங்களுக்கு எத்தனை தடவைகள் நோயறிகுறிகள் ஏற்பட்டது என்பதையும், தேவை ஏற்பட்டால் மட்டும் பாவிக்கும் அஸ்தலின் வகை பம்ப் ( Asthalin – நீல நிற பம்ப்) எத்தனை தடவைகள் பாவிக்க வேண்டிய தேவையேற்பட்டது என்பதையும் ஆஸ்துமா நாட்குறிப்பேடு உள்ளடக்கி இருக்கும். இது மேலதிக வைத்தியத்திற்கும் உங்கள் நோயின் தீவிர நிலையை வைத்தியர் அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும். - உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகள் பற்றியும் அவற்றால் ஏற்படவல்ல பக்க விளைவுகள் பற்றியும் வைத்தியரிடமிருந்து அறிந்து கொள்ளுங்கள்.
- நீங்கள் வீட்டிலேயே பாவிக்கவல்ல Peak expiratory flow meter எனும் கருவியை இயலுமாயின் வாங்கி அதனைப் பயன்படுத்துவதன் ஊடாக உங்கள் ஆஸ்துமாவின் தீவிரத் தன்மையை கண்காணித்துக் கொள்ளுங்கள்.
- முடியுமாயின் வருடாந்தம் இன்புளுவென்சாவிற்கெதிரான தடுப்பு மருந்து (Vaccination for Influenza) ஏற்றிக் கொள்ளுங்கள்.
- உங்களுக்கு உடற்பயிற்சியின் போது ஆஸ்துமா மோசமடைகிறதாயின் உடற்பயிற்சிக்கு சற்று முன்னராக தேவையேற்படும் போது மட்டும் பயன்படுத்தும் ( நீல நிற) பம்பை வைத்தியரின் பரிந்துரையின் படி பாவியுங்கள்.
- தேவையற்ற வகையில் அல்லது வைத்தியரின் ஆலோசனையின்றி மருந்தகங்களில் நேரடியாக மருந்து வாங்கி உட்கொள்வதை நிறுத்துங்கள்.
- உங்களுடைய நோய் நிலைமை தீவிர நிலையை அடையும் நேரங்களில் தேவையேற்படுகின்ற நேரங்களில் பாவிக்கின்ற (நீல நிற) பம்பை பத்து தடவைகள் சரியான முறையில் உபயோகித்தும் நோயின் தீவிரம் குறையவில்லையாயின் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையை நாடவேண்டும்.
- பம்ப் பாவித்தல் சமூகத்தில் தரக்குறைவாக கருதப்பட்டு மாற்றீடாக வாயினால் உட்கொள்ளும் மருந்துகளை பாவிப்போர் நம்மிடையே உள்ளனர். மருந்து உள்ளெடுக்கும் முறைகளின் தெரிவு நோயாளியினுடையதாக இருப்பினும் பம்பினால் மருந்தை உள்ளெடுக்கும் போது நேரடியாக நுரையீரலை சென்றடைவதால் தேவையான மருந்தின் அளவு குறைவதுடன் மருந்தினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுளும் பெருமளவில் குறைவடையும்.
- பெக்லேற் (மண்ணிற பம்ப்) என்பது வைத்தியசாலையில் வழங்கப்படும் பெக்லமெதசோன் (Beclamethasone) எனப்படும் ஸ்ரிரொயிட் (Stenoid) வகை மருந்தை கொண்டுள்ளது. இது தினமும் காலையும், இரவும் தொடர்ச்சியாக பாவிப்பதற்குப் பரிந்துரைக்கப்படும்.
- இவ் வகைப் பம்ப் பாவித்த பின்னர் வாயை சுத்தமான நீரினால் நன்கு கழுவ வேண்டும்.
மருத்துவர். தேவரஞ்சனா புவனேந்திரன்
நீரிழிவு சிகிச்சை நிலையம்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.