சரியான முறையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படாத நீரிழிவு நோயினால் உடலின் பல்வேறு அங்கங்கள் பாதிக்கப்படுகின்றன. இதயம் மற்றும் குருதிக்கலன்கள் சிறுநீரகங்கள், கண்கள், மூளை, நரம்புகள், கால்கள் எனக் கூறிக்கொண்டே போகலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்களில் உயர்குருதிக்குளுக்கோஸ் காரணமாக சிறுநீரகத்திலுள்ள சிறிய குருதிக்கலன்கள் (மயிர்த்துளைக்குழாய்கள்) பாதிப்படைகின்றன. இதனால் அல்புமின் எனப்படுகின்ற ஒரு வகையான குருதியிலுள்ள சிறிய புரதமானது சிறுநீரினூடாக வெளியேறுகின்றது. இதன் காரணமாக மிகக் குறைந்த அளவிலேயே சிறுநீரினூடாக வெளியேறுகின்றது. (24 மணித்தியாலத்திற்கு 30mg இற்கு குறைவாக) ஒரு நாளில் 30mg இற்கு குறைவாக அல்புமின் சிறுநீரில் வெளியேறுவது நீரிழிவுச் சிறுநீரக நோய் ஏற்படவில்லை என்பதைக் காட்டுகின்றது.
சிறுநீரக மயிர்துளைக் குழாய்கள் பாதிக்கப்படும் போது மேலும் மேலும் சிறிய புரதம் மயிர்க்குழாய்களினூடாக வெளியேறி சிறுநீரில் காணப்படும். சிறுநீரில் அல்புமின் அளவில் ஏற்படுகின்ற இந்த அதிகரிப்பு (24 மணித்தியாலங்களில் 30mg – 300mg வரை) மைக்ரோ அல்புமினூரியா (micro albuminuria) எனப்படுகின்றது. இது நீரிழிவினால் ஏற்படுகின்ற சிறுநீரகப் பாதிப்பின் முதலாவது அறிகுறியாகும். மைக்ரோ அல்புமினூரியா கண்டறியப்பட்டு சிகிச்சை பெறாது விடின் அது அதிகளவில் புரதம் சிறுநீரில் வெளியேறும் நிலையை (Proteineuria புரோடினூரியா) எனப்படுகின்றது. ( 24 மணித்தியாலங்களுக்குள் 300mg இற்கு மேற்பட்ட புரதம்) இந்நிலைமை கண்டறியப்பட்டு சிகிச்சை பெறாது விடின் சிறுநீரில் அதிகளவு புரதம் ( 1 – 3g ற்குமேல்) வெளியேறும் நிலை ஏற்படலாம். இது குறிப்பிடத்தக்க அளவு சிறுநீரகப் பாதிப்பை காட்டும்.
சிறுநீரில் சிறியளவு புரதம் வெளியேறும் நிலையிலிருந்து அதிகளவு புரதம் வெளியேறும் நிலையை அடைய 10 – 15 வருடங்கள் எடுக்கலாம். இந்நேரத்தில் சிறு நீரகம் பாதிப்படைவதால் உயர்குருதி அமுக்கம் ஏற்படலாம். உயர்குருதி அமுக்கம் காரணமாக சிறுநீரகம் மேலும் பாதிப்படையும். இவ்வேளையில் சரியான சிகிச்சை வழங்கப்படாது விடின் அடுத்த சில வருடங்களில் சிறுநீரகப் பாதிப்பு அதிகரித்து சிறுநீரக தொழிற்பாட்டு செயலிழப்பு ஏற்படக் கூடும்.
சரியாக கட்டுப்படுத்தப்படாத குருதிக்குளுக்கோசு மற்றும் உயர்குருதிஅமுக்கம் போன்ற தொடர்ச்சியான சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இரண்டு சிறுநீரகங்களும் அதிகளவு பாதிப்படைந்த நிலையில் சிறுநீரகச் செயலிழப்பு (அனேகமாக நோயாளிக்குத் தெரியாத வகையில்) ஏற்படுகின்றது.இது நீண்டகாலச் சிறுநீரகச் செயலிழப்பு எனப்படும்.
சிறுநீரகத்தில் ஆரம்ப கால பாதிப்பு ஏற்படும் போது அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. ஆரம்ப கால சிறுநீரகப் பாதிப்பினை சிறுநீரில் அல்புமின் அல்லது புரதம் வெளியேறுவதைக் கொண்டு அறியலாம். இரு சிறுநீரகங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்புக்குள்ளாகி சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் போதுதான் சிறுநீரகப் பாதிப்புக்குரிய அறிகுறிகள் வெளிக்காட்டப்படுகின்றன.
சிறுநீரகங்களின் தொழில்களாவன உடலுக்கு நச்சான யூரியா போன்ற கழிவுப் பொருட்களை வெளியகற்றல், கனியுப்புச்சமநிலை, மற்றும் அமிலச்சமநிலையை பேணுதல் ஆகும். விற்றமின்கள், எரித்திரோபொயிற்ரின் (Erythropoeitin) என்பன உற்பத்தியாகும் இடமும் சிறுநீரகம் ஆகும்.
சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் போது யூரியா என்ற நச்சுக் கழிவுப் பொருள் சிறுநீரகத்தால் வெளியேற்றப்படுவதில்லை. இதனால் யூரியா குருதியில் அதிகரிக்கின்றது.
இதனால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்ட நோயாளர்களில் பசியின்மை, குமட்டல், வாந்தி என்பன ஏற்படுகின்றன.
கிரியாற்றினின் என்கின்ற தசைகள் உடைக்கப்படும் போது வெளியாகின்ற பதார்த்தம் குருதியிலிருந்து சிறுநீரகம் மூலம் வெளியகற்ப்படுகின்றது. எனவே சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் போது கிரியாற்றினின் அளவு குருதியில் அதிகரிக்கின்றது.
நீரிழிவுச் சிறுநீரகப் பாதிப்பையும் சிறுநீரகச் செயலிழப்பையும் எவ்வாறு தடுக்கலாம்?
- குருதிக்குளுக்கோசின் அளவினை சாதாரண எல்லைக்குள் வைத்திருங்கள். HbA1c இனை 7 ற்கு குறைவாக வைத்திருத்தல் வேண்டும்.
- சிறுநீரில் மைக்ரோஅல்புமினூரியா, அல்புமினூரியா பரிசோதனைகளை 6 மாதங்களிற்கு ஒரு தடவை வாழ்நாள் முழுவதும் செய்யுங்கள்.
- மைக்கிரோஅல்புமினூரியா அல்லது அல்புமினூரியா காணப்படுமிடத்து வைத்திய ஆலோசனையுடன் ஏ.சி.ஈ இன்கிபிரர் (ACE inhibitor) /ஏ.ஆர்.பீ (ARB) மருந்துகளை ஆரம்பியுங்கள்.
- குருதிக்குளுக்சோசை சிபாரிசு செய்யப்பட்ட எல்லைக்குள் பேணுங்கள். மைக்கிரோ அல்புமினூரியா அல்லது புரதயூரியா உள்ளவர்களிற்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.
- குருதிஅமுக்கத்தினை மாதமொரு தடவை அளவிடுங்கள் நீரிழிவுச் சிறுநீரகப் பாதிப்பினைத் தவிர்ப்பதற்காக குருதிஅமுக்கம் 125/75 mmdg இற்கு கீழே பேணுங்கள்.
- வருடத்திற்கு ஒரு தடவை எனினும் சிறுநீரகத் தொழிற்பாட்டு பரிசோதனையைச் செய்ய வேண்டும். அவையாவன கிரியாற்றினை வெளியகற்றல் சோதனை, 24 மணித்தியால சிறுநீரக புரத அளவீடு, குருதி கிரியாற்றினைன் சோதனை என்பனவாகும். இந்தப் பரிசோதனைகள் சிறுநீரகத் தொழிற்பாட்டினைச் சரியாக அளவீடு செய்ய உதவும்.
- ஆரம்பகட்ட சிறுநீரகச் செயலிழப்பு காணப்படுமாயின் அது பிந்திய நிலை சிறுநீரகச் செயலிழப்பாக மாறுவதை தடுக்க அல்லது பிற்போட சிறந்த குருதி அமுக்கக் கட்டுப்பாடு மற்றும் சிறந்த குருதிக் குளுக்கோஸ் கட்டுப்பாடு என்பன அவசியம்.
- சிறுநீரில் புரதம் வெளியேறுவதைக் தடுக்க தகுந்த சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் நோயாளர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படும். சிறுநீரகச் செயலிழப்பினை உடைய நோயாளர்கள் அதனைச் சிறந்த முறையில் கவனிக்க வேண்டும். அத்துடன் வசதியுள்ள ஒரு நிலையத்தில் சிகிச்சை பெற வேண்டும்.
- நீரிழிவுடைய அனைத்து நோயாளர்களும் புகைப்பிடித்தலை நிறுத்துதல் வேண்டும். புகைப்பிடித்தலை நிறுத்துவது நீரிழிவுச் சிறுநீரக நோயின் அதிகரிப்பை பெருமளவில் குறைப்பதுடன் இந்நோய்களால் குறைந்த வயதில் ஏற்படும் மரணங்களையும் குறைக்கின்றது.
கஜேந்தினி வேலுப்பிள்ளை
நீரிழிவு சிகிச்சை நிலையம்
யாழ் போதனா வைத்திய சாலை