கர்ப்ப கால நீரிழிவு நோய் என்பது கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய் ஆகும். இது பொதுவாக கர்ப்பத்தின் 24- 28ம் கிழமைகளுக்கிடையிலேயே ஏற்படுகின்றது. எனவே கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான பரிசோதனை 24ம், 28ம் கிழமைகளுக்கிடையே மேற்கொள்ளப்படுகின்றது.
கர்ப்பத்தின் போது சூல்வித்தகத்தினால் (placenta) சுரக்கப்படும் சில ஹோமோன்கள் தாயின் இன்சுலினை சரியாக தொழிற்படவிடாமல் தடுக்கின்றன. இதனால் இன்சுலினுக்கான தடை (Insulin resistence) அதிகரிக்கப்படுகின்றது. இதனால் ஒரு கர்ப்பிணித் தாயிற்கு சாதாரண நிலையிலும் பார்க்க இரண்டுஅல்லது மூன்று மடங்கு அளவு இன்சுலின் தேவைப்படுகின்றது. இவ்வாறு மேலதிகமாக தேவைப்படும் இன்சுலின் உடலினால் தொகுக்க முடியாத போது நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.
கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியம் கூடிய கர்ப்பிணித் தாய்மார்கள்
- 30 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள்
- முதலாம் நிலை உறவினர்கள் வகை II நீரிழிவு நோயுடையவர்களை கொண்ட கர்ப்பிணித் தாய்மார்கள்.
- முன்னைய கர்ப்பங்களின் போது கர்ப்பகால நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள்.
- அதிக நிறையுடைய கர்ப்பிணித்தாய்மார்கள்
- அதிக நிறையுடைய (4Kg இலும் அதிகமான) குழந்தைகளை முன்னைய கர்ப்பங்களில் பிரசவித்த தாய்மார்கள்
- முன்னைய கர்ப்பங்களின் போது காரணம் கண்டுபிடிக்கப்படாத கருச்சிதைவுகள் அல்லது இறந்த குழந்தைகளைப் பிரசவித்த தாய்மார்கள் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற கர்ப்பிணித் தாய்மார்கள்.
- கர்ப்பகால நீரிழிவு நோயுடை தாய்மாரின் குருதியில் சாதாரண அளவிலும் பார்க்க அதிகளவில் குளுக்கோஸ் காணப்படும். தாயின் குருதியின் குளுக்கோஸ் மட்டத்திற்கு சமனாக வயிற்றில் வளரும் குழந்தையின் குருதியிலும் அதிகளவான குளுக்கோஸ் காணப்படும். இதனால் குழந்தை பருமனில் அதிகரித்து பிறப்பு நிறை கூடிய குழந்தையய் பிரசவிக்கப்படும்.
கர்ப்பகால நீரிழிவு நோயுடைய தாய்மாருக்கான சில அறிவுரைகள்.
கர்ப்பகால நீரிழிவு நோயுடைய தாய்மாருக்கு அதிக நிறையுடைய குழந்தைகள் பிறப்பதால் பிரசவத்தின்போது சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.
அவற்றில் சில –
- குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
- பிரசவத்தின் போது குழந்தையின் தோள்மூட்டு விலகல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படல்
- தடைப்பட்ட பிரசவம் (Obstructed Labour) ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.
ஆயினும் குருதியில் குளுக்கோசின் அளவை கட்டுப்பாட்டில் பேணினால் அதிக நிறையான குழந்தைகள் பிறப்பதையும் மேற்குறிப்பிட்ட மற்றைய பாதிப்புக்களையும் இயன்றவரை தவிர்த்துக்கொள்ளலாம்.
பிரசவத்தின் பின்னர் பிறந்த குழந்தைகளுக்கு குருதிக் குளுக்கோசின் அளவு திடீரென குறைந்து “ஹைப்போகிளைசீமியா” (Hypoglycemia) ஏற்படும். குழந்தையின் குருதியில் இன்சுலின் அதிகமாக காணப்படுவதாலும் பிரசவத்தின் பின் தாயிலிருந்து குழந்தைக்கு குளுக்கோசு கடத்தப்படுவது தடைப்படுவதாலுமே இந்நிலை உருவாகின்றது. இந்நிலையையும் கர்ப்பத்தின்போது ஒழுங்காக நீரிழிவு கட்டுப்பாட்டை பேணுவதால் தவிர்க்கலாம்.
பிரசவ கால நீரிழிவானது பிரசவத்தின் பின்னர் குணமடைந்து விடக்கூடியது எனினும், தாய்மார் பிரசவத்தின் பின் வைத்தியரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.
பிரசவகால நீரிழிவுடைய தாய்மார் எதிர்காலத்தில் வகை II நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாகும். அத்தாய்மார் அதனைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை ஏனெனில் அவர்கள் கர்ப்பகால சலரோகத்தை ஒரு முன்னெச்சரிக்கையாகக் கொண்டு முதலாம் நிலை கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடிப்பார்களேயாயின் அவர்கள் பிற்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
பிரசவகால நீரிழிவு நோய்க்கு சலரோக மாத்திரைகள் பாவிக்கப்படுவதில்லை. ஆகவே பிரசவகால சலரோகமுடைய கர்ப்பிணித்தாய்மார் இன்சுலின் ஊசியை பாவிக்க வேண்டியிருக்கும்.
இன்சுலின் ஊசியைப் பாவிக்கும் போது ஹைப்போகிளைசீமியா (Hypoglycemia) ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளதால் கர்ப்பிணித்தாய்மார்கள் ஹைப்போகிளைசீமியாவின் அறிகுறிகளை தங்கள் கணவரிடமோ அல்லது குடும்ப உறுப்பினரிடமோ கூறிவைத்துவிட வேண்டும். ஏனெனில், குருதியில் வெல்லமட்டம் மிகவும் குறையும்போது அது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கர்ப்பகால நீரிழிவு நோயுடைய தாய்மாருக்கு சிறுநீர் வழித்தொற்று (Urinary tract infection) மற்றும் வேறு தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம். மேலும் ஏற்கனவே இதயத்திற்கு குருதியைக் காவும் குழாய் தடிப்படைதல், சிறுநீரக பாதிப்பு விழித்திரை பாதிப்பு (Retinopathy) போன்ற நோய்களுடைய தாய்மாருக்கு அந்நோய்கள் மேலும் மோசமடையலாம். இவ்வாறான நிலைமைகளை ஒழுங்கான வைத்திய முறைகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
பிரசவ கால நீரிழிவு நோயுடைய கர்ப்பிணித்தாய்மார் தங்கள் உடல் நிலைக்கேற்ப மகப்பேற்று வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்ட படி உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். உடற்பயிற்சி செ்யயும் பொழுது கர்ப்பிணித்தாய்மார் தங்கள் கணவரையோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களுடனோ சேர்ந்து செய்வது நல்லது.
ஆராய்ச்சிகளின் படி பிறக்கும் குழந்தைக்கும் வகை இரண்டு சலரோகம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். எனவே, முழுக்குடும்பத்திற்கான வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டுவருவது (life style modification) அவசியமாகும். எனவே குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பழக்குவதன் மூலம் அவர்களுக்கும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை இயன்றவரை குறைத்துக் கொள்ள முடியும்.
சில ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள்
- ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கங்கள்
- உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபடுதல்
- தொலைக்காட்சி பார்த்தலையும் மற்றும் கணினி விளையாட்டுக்களில் (Computer Games) ஈடுபடுவதையும் இயன்றவரை கட்டுப்படுத்தல் (ஒரு நாளைக்கு 2 மணித்தியாலத்திற்கு மேற்படாமல்)
ஒரு கர்ப்பிணித் தாயிற்கு கர்ப்பகால சலரோகம் உண்டா? இல்லையா ? என தீர்மானிக்க “குளுக்கோசு ரொலரன்ஸ் ரெஸ்ட் (GTT)” எனும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்பொழுது 75g குளுக்ககோசை உட்கொண்டு 2 மணித்தியாலங்களின் பின் குருதிக்குளுக்கோசின் பெறுமானம் 198mg/dl இலும் அதிகரிப்பின் அத் தாயிற்கு கர்ப்பகால சலரோகம் உண்டென தீர்மானிக்கலாம்.
இப்பரிசோதனைக்கு மேலதிகமாக உணவுக்குப் பின்னான குருதிக்குளுக்கோசின் அளவு (Post prandial blood sugar) Glucose Challenge test, குளுக்கோஸ் ஏற்றப்பட்ட ஹிமோகுளோபினின் அளவு ( Glycosylated hemoglobin) (HbAic) என்பனவும் மேற்கொள்ளலாம்.
மேலும் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கின்றதா என்பதைக் கணக்கிட ஸ்கான் ( Ultra Sound Scan) மற்றும் தொடர்ச்சியான வயிற்றின் நீளத்தை அளவிடுவதன் (Symphysio fundal height) மூலம் கணிக்க முடியும்.
இவற்றிற்கு மேலதிகமாக குழந்தையின் ஆரோக்கியத்தை அறிய குழந்தையின் இதயத்துடிப்பை அளவிடும் கருவியை Foetal Cardio tocograph பயன்படுத்தலாம்.
ப.கலாவேந்தன்