“விரும்பிய உணவுவகைகளை உண்ணமுடியாத ஒரு வாழ்க்கையின் அர்த்தம் என்ன? ஒரு நல்ல காரியத்திற்கு போனால் கூட அவர்கள் தருவதை உண்ணமுடியாதா? வடை, பற்றீஸ், ஐஸ்கிறீம், பாயாசம், றோல்ஸ் என பல உணவுவகைகளை ஒறுத்து ஒரு சன்னியாசவாழ்க்கை வாழ்ந்துதான் நிறையை கட்டுப்படுத்த வேண்டுமா? இப்படி ஒரு நிறைக்குறைப்பு தேவைதான, என்று எல்லாம் மனம் சலித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மேற்குறிப்பிட்ட உணவுவகைகளை உண்டும் நாம் அளவான நிறையைப் பேணமுடியும். துறவறம் பூண்டவர்கள் போல் இவை அனைத்தையும் ஒறுத்து வாழ வேண்டிய அவசியமில்லை. இந்த உணவுகளின் சக்த்திப் பெறுமானமும்(கலோரி) உணவிலே அவற்றை எவ்வாறு சமனிலைப்படுத்துவது என்ற அறிவும் இருந்தால் உங்கள் உணவிலே பொரியல், பாயாசம், ஐஸ்கிறீம், பற்றீஸ், வடை லட்டு, ரோல்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதில் பிரச்சினை இருக்காது, கலியாண வீடுகளுக்குச் செல்லும் பொழுது கூட நாம் வடை பாயாசம் உண்ணமுடியும்.
இந்த உணவுகளை உண்ணும் சந்தர்ப்பத்தில் உணவின் சக்திப்பெறுமானத்தை அல்லது கலோரிப் பெறுமானத்தை எவ்வாறு சமநிலைப் படுத்துவது? இவற்றால் ஏற்படும் நிறை அதிகரிப்பை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணமாக ஒருவர் வடை, ரோல்ஸ், ஐஸ்கிறீம் என்பவற்றை மேலதிகமாக உண்ணவேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவற்றை மனச்சந்தோஷமாக சுவைத்து உண்டபின் அவரின் அடுத்த பிரதான உணவை பால், பழமாக மாற்றிக்கொண்டால் அது அவரின் சுகாதார நிலையிலோ நிறையிலோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மாட்டாது. அதற்காக தினந்தோறும் இந்த உணவுவகைகளை உண்பது ஆரோக்கியம் ஆகாது.
“உணவுப்பொருட்களின் சக்தி அல்லது கலோரிப்பெறுமானம் என்றால் என்ன? எமது உடலுக்கு தினம் தோறும் தேவைப்படும் சக்தியின் அளவு என்ன? நாம் செய்யும் ஒவ்வொரு தொழிற்பாட்டிற்கும் எவ்வளவு சக்தி தேவைப்படுகின்றது? போன்ற விடயங்களை தெரிந்து வைத்திருப்பது மிகவும் பயனுடையதாக இருக்கும்.
ஒரு உணவை நாம் உண்ணும் பொழுது அது எவ்வளவு சக்தியை எமக்கு வழங்குகின்றதோ அது அந்த உணவின் சக்திப் பெறுமானம் என்று சொல்லப்படும். இது கிலோ கலோரியிலே அளக்கப்படும். நாம் உண்ணும் உணவின் மொத்த சக்திப்பெறுமானம் எமது உடற்தேவைக்கு மேலதிகமாக இருப்பின் அது உடல்நிறையை அதிகரிக்கும். எமது உடலின் அன்றாட தேவைக்கு மேலதிகமாக உண்பதே உடல்நிறை அதிகரிப்பிற்கு காரணமாக அமைகிறது.
ஒவ்வொரு உடலுக்கும் தேவைப்படும் கலோரியின் அளவு மாறுபடும். சராசரியாக ஒரு பெண்ணிற்கு தினம்தோறும் தேவைப்படும் சக்தியின் அளவு 1900 கிலோகலோரி ஆகும். ஆதே போல ஒரு சாதாரண நிறை உயரம் உடைய நடுத்தர வயதுடைய ஆணிற்கு தினம் தோறும் தேவைப்படும் சக்தியின் அல்லது கலோரியின் அளவு 2500 கிலோகலோரி ஆகும்.
உடலுக்கு தேவைப்படும் சக்தியின் அளவு அவரின் உயரம், வயது, நிறை, அவரின் தொழிற்பாடு வீதம் போன்றவற்றில் தங்கி இருக்கின்றது.
நிறை குறைக்க விரும்பும் ஒவ்வொருவரும் தனது உடல் பராமரிப்புக்குத் தேவைப்படும் கலோரிப்பெறுமானத்திலும் பார்க்க குறைந்த கலோரிப் பெறுமானமுள்ள உணவை உண்டுவருவார்களாக இருந்தால் அவர்களது நிறை குறைய ஆரம்பிக்கும்.
ஒருவருடைய நிறை படிப்படியாக அதிரித்துவரின் அதனுடைய அர்த்தம் அவர் தினம்தோறும் உட்கொள்ளும் உணவின் மொத்த கலோரிப்பெறுமானமானது அவரின் உடற்பராமரிப்புக்கு தேவைப்படும் மொத்த கலோரிப் பெறுமானத்திலும் பார்க்க அதிகம் என்பதாகும்.
“ஒவ்வொரு உணவினதும் கலோரிப் பெறுமானம் என்ன? நாம் ஒவ்வொரு வேலையையும் மேலதிகமாகச் செய்யும் பொழுது செலவிடப்படும் கலோரி எவ்வளவு? ஒரு கிலோ நிறைக்குறைப்பிற்கு எவ்வளவு கலோரி இழக்கப்பட வேண்டும்?” போன்ற விடயங்களை தெரிந்து வைத்திருப்பது மிகவும் பயனுடையதாக அமையும்.
தொடரும்…..
சி.சிவன்சுதன்
பொதுவைத்திய நிபுணர்
போதனாவைத்தியசாலை யாழ்ப்பாணம்