வகை 1 சலரோகமுள்ள பிள்ளைக்கான உணவுகள்.
இந்த உணவுக்கான ஆலோசனைகள் உங்கள் குழந்தையின் சலரோகத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவும். பிள்ளை உண்ணும் உணவு இரத்தத்தின் வெல்லத்தினளவைத் தீர்மானிக்கிறது. பிளளையின் தினசரி வாழ்க்கை முறை, பாடசாலை அட்டவணை, விளையாட்டுச் செயன்முறை என்பனவற்றைப் பொறுத்து உணவுப்பழக்கம் தீர்மானிக்கப் பட வேண்டும். தீவிரமான உடற் பயிற்சிக்கு முன்பாகவோ, பிறகோ அதன்போதோ கொடுக்கவேண்டிய உணவு பற்றி உங்கள் வைத்தியருடன் உரையாடுங்கள். உணவுத்திட்டம் பிள்ளை வயதிற்கு ஏற்ற உடல்நிறை, விருத்தி என்பனவற்றைப் பெறுவதற்கேற்பக் காலத்துக்கு காலம் மாற்றியமைக்கப் பட வேண்டும்.
- சாதாரண வளர்ச்சி, விருத்திக்குத் தேவையான உணவுகள் நோயற்ற பிள்ளையினதைப் போலவே இந்தப் பிள்ளைக்கும் இருக்கும்.
- ஆரோக்கியமான உணவுப் பழக்கம் உங்கள் பிள்ளைக்குத் தேவையானதால் குடும்ப உணவே மிகவும் ஏற்றது.
- நார்ச்சத்துள்ள உணவுகள் உணவுண்ட திருப்தியைத் தரும். அதேவேளை இரத்தத்தில் வெல்லமட்டத்தின் உயர்வைக் குறைக்கிறது. ஆகவே சுத்திகரிக்கப்ப படாத அல்லது குறைந்தளவு செயல்முறைகளுக்கு உட்பட்ட தானியங்கள், அவரை இலைவகைகள் என்பவற்றை அதிகம் பாவிப்பது நல்லது.
- உங்கள் பிள்ளை விரும்பிய நேரத்தில் உணவுண்ணப் பழகுவது நல்லதல்ல. ஏனேனில் வெல்லத்தினளவு இரத்தத்தில் உயரும்போது செயற்படத் தேவையான இன்சுலின் உடலில் இருக்காது ஆகவே ஒழுங்கான உணவுப்பழக்கம் அவசியமாகும்.
- பிள்ளைக்கு 3 பிரதான உணவுகளும் 3 சிறு உணவுகளும் செயற்பாட்டுத் தன்மைக்கேற்ப ஒரு நாளில் பகிர்ந்து அளிக்கப்படும்.
- மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக உணவுண்ணாமல் இருப்பது கூடாது.
- உணவுகள் நாளின் குறிப்பிட்ட ஒரே நேரத்திலேயே எடுக்கப்பட்ட வேண்டும். இதன் மூலம் 24 மணிநேரமும் இரத்தத்தின் வெல்லமட்டம் ஏற்றுக் கொள்ள கூடிய வரையறையுள் இருப்பதற்கு ஏற்றப்பட்ட இன்சுலின் உதவும்.
- உணவு உட்கொள்ளா விட்டால் வெல்ல அளவு குருதியில் மிகவும் குறைவதால் பல சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
- பிள்ளைக்குத் தேவையான சக்தியின் அளவைப் பொறுத்து உணவு அட்டவணை தயாரிக்கப் படும். மாச்சத்துப் ( காபோஹைரேட்) பரிமாற்றம் அல்லது உணவுப் பகுதிகள் என இவ் அட்டவணை வெளிப்படுத்தப்படும்.
- உணவுவகைகளின் மாச்சத்துப் (காபோஹைரேட்) பரிமாற்றம் அல்லது உணவுப் பகுதிகள் பற்றிய தகவல்தொகுப்பு இப்பகுதியில் பின்னர் வெளியிடப்படும்.
உங்கள் பிள்ளைக்குத் தேவையான சக்தியைக் கணக்கிடுதல்.
- ஆரம்பத்தில் பிள்ளையின் நிறைக்கேற்பக் கலோரிப் பெறுமானம் கணக்கிடப்படும். பின்னர் பிள்ளை இவ் வயதில் இருக்கவேண்டிய நிறைக்கு கணக்கிடப்படும். அதாவது வயதுக்குரிய 50வது சென்ரைல் நிறை அல்லது வயதுக்குரிய சராசரி நிறைக்குக் கணக்கிடப்படும்.
- முதல் 10 கிலோகிராம் → 110kcal / kg
அடுத்த 10 கிலோகிராம் → 70Kcal/kg
அதன்பின்னர் → 30Kcal/kg
உணவின் கூறுகளும் ஒவ்வொரு கூறிலுமுள்ள சத்துப் பெறுமான விகிதமும்.
- உணவின் முக்கிய கூறுகளாவன மாச்சத்து, கொழுப்பு, புரதம் என்பனவாகும்.
- மாச்சத்திலுள்ள சக்தியைப் பொறுத்தே உணவுத் தொகுதிகள் அல்லது மாச்சத்து பரிமாற்றத்திற்கேற்ப உணவு திட்டமிடப் படுகின்றது.
முழுச்சக்தியில் | 55% மாச்சத்திலிருந்து 10% – 15% புரதம் 30% கொழுப்பு (நிரம்பிய கொழுப்பு (<10%) என்ற ரீதியில் பெறப்படுகின்றது) |
- 1 கிராம் காபோஹைட்ரேட் = 4கலோரிகள்
- 15 கிராம் காபோஹைட்ரேட் = 1 பரிமாற்றத் தொகுதி ( உணவுப் பகுதி)
உதாரணம்:- பிள்ளையின் நிறை – 22Kg
கலோரித் தேவை = 1100+700+60 = 1860 கலோரிகள்
மாச்சத்ததில் பெறப்படுவது 1860 x 55/100 = 1023 கலோரிகள்
4 கலோரிகள் = 1 கிராம் காபோஹைட்ரேட்
1023 கலோரிகள் = 1023/4 = 256 கிராம்
15 கிராம் காபோஹைரேட் = 1 பரிமாற்றத் தொகுதி / உணவுப் பகுதி
ஃ இப் பிள்ளைக்குத் தேவையானது | = 256 / 15 பகுதி |
= 17 உணவுப்பகுதி ( Portions) |
17 உணவுப்பகுதியை 3 பிரதான 3 சிறு உணவுகளாகப பரிக்க வேண்டும் 2 ½ இலிருந்து 3 மணித்தியாலத்திற்கு ஒரு முறை உணவு வழங்கப்படும்.

கொடுக்கும் நேரம் பிள்ளையின் செயற்பாட்டுக்கு ஏற்ப அமைய வேண்டும்.
இரத்த வெல்லச் சுட்டியும் (glycamic index) உணவுவகைகளும்
மாச்சத்துள்ள உணவுகள் இரத்தத்திலுள்ள வெல்லத்தின் மட்த்தை எவ்வாறு பாதிக்கும் என்பதைக் குறிக்கின்ற குறியீடே இதுவாகும். இந்நிலைப் படுத்தல் 0 இலிருந்து 100 வரையாகும் குறைந்த எண்சுட்டியுள்ள உணவு குறைந்தளவிலேயே வெல்லமட்டத்தைக் குருதியில் உயர்த்துகிறது.
< 55 – குறைந்த சுட்டி
56-69 – இடைத்தரமான சுட்டி
> 70 – உயர் சுட்டி
- உயர்சுட்டியுள்ள உணவு விரைவில் அகத்துறிஞ்சப்பட்டு இரத்த வெல்ல மட்டத்தை விரைவாக உயர்த்தும். பின்னர் விரைவாக வீழ்ச்சியும் அடையும்.
- குறைந்த சுட்டியுள்ள உணவு மெதுவாக உறிஞ்சப்பட்டு ஆறுதலாக இரத்த வெல்லத்தை அதிகரித்து பின் மெதுவாக வீழ்ச்சியடையும்.
- பிரதான உணவுகளும் சிறு உணவுகளும் இவ்விருவகையான ( கூடிய, குறைந்த சுட்டிகள்) உணவுகளையும் கொண்டிருக்க வேண்டும். இதனால் இரத்தத்தில் வெல்லத்தின் மட்டம் உறுதியான நிலையில் பேணப்பட உதவும்.
- உணவுவகைகளும் அவற்றின் இரத்த வெல்லச் சுட்டியும் இப்பகுதியில் பின்னர் வெளியிடப்படும்.
- உங்கள் பிள்ளைக்கு உணவைத் தேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளதையும் எந்நாளும் ஒரே உணவை உண்ணத் தேவையில்லை என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
நாள்முழுவதும் உகப்பான வெல்லமட்டத்தைக் குருதியில் பேணுவதற்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவுண்ணுதல் அவசியமானதாகும்.
- தொடரும்