“கண்டதும் கற்றவன் பண்டிதன் ஆவான் கண்டதும் உண்டவன் பண்டிபோல் குண்டாவான்” என்று பலரும் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நம் முன்னோர்கள் கூறிவைத்திருக்கிறார்கள். எனவே நாம் எம் முன்னவர்களின் கருத்துக்களையும் கருத்தில் எடுத்து. ஆரோக்கியமாக சுவையாக நிறைவாக உண்டு எமது நிறையை சரியான அளவில் பராமரிக்கும் கலையை கற்றுக்கொள்ள முயலுவோம்.
நிறையை குறைத்துக் கொள்வதற்கு பட்டிணி கிடக்கவேண்டிய அவசியமில்லை. பட்டிணி கிடந்து நிறையை குறைத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. நிறை குறைப்பதற்கு முயற்சி எடுக்கும் காலத்திலே ஆரோக்கியமான உணவுவகைகளை உண்ணுவதை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த காலத்திலே சுவையான உணவுவகைகளை உண்ண முடியாது என்று தப்பவிப்பிராயமும் கொள்ளத் தேவையில்லை. சரியான நடவடிக்கைகள் மூலம் உடல் நிறையை குறைத்தால்,வரும் காலங்களில் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று பயப்படவேண்டிய அவசியமும் இல்லை.
உடல் நிறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற ஒரு உணர்வு பல்வேறு தரப்பினரிடையேயும் குறிப்பாக இளம் வயதினரிடையே மேலோங்கிவருவது ஒரு நல்ல அறிகுறியாகும். உடல் நிறையை குறைத்துக்கொண்ட பலர் களைப்பு நீங்கி மூட்டு நோ, நாரிநோ என்பன குறைத்து பல்வேறுபட்ட நோயின் தாக்கங்கள் குறைந்து பாவிக்கும் மருந்துகளையும் குறைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வது மேலும் பலரை நிறைகுறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கு தூண்டுகோலாக இருக்கிறது.
ஒருவர் அளவான உடல்நிறையை பேணுவது அவர் வாழும் காலத்தை அதிகரிக்கச் செயவதுடன் அவரின் செயற்திறனையும் கூட்டும் என்பது பல ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அதிகரித்த உடல்நிறை பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்லும் என்ற விடயத்தை பொதுவான அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். உடல் நிறையை சரியாக அளவில் பேணாதவர்களுக்கு நீரிழிவு, உயர் குருதி அமுக்கம், பாரிசவாதம், மூட்டு சம்பந்தமான நோய்கள், நாரி சம்பந்தமான நோய்கள், புற்று நோய்கள், மாரடைப்பு, நுரையீரல் சம்பந்தமான நோய்கள், மாதவிடாய் கோளாறுகள், கற்பம் தரிப்பதில் தாமதம், குடும்ப வாழ்வில் ஆரோக்கிய குறைவு போன்ற சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
ஒருவருக்கு நிறையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது சம்பந்தமான தெளிவும் ஏற்படுமாயின் நிறையை கட்டுப்பாட்டிடிற்குள் கொண்டுவருவது மிகவும் இலகுவானது.
இனி வரும் பகுதிகளில் இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது சம்பந்தமாக பார்ப்போம்.
தொடரும்………
சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.
யாழ் போதனாவைத்தியசாலை.